இரண்டாம் குழந்தை . . . முதல் சுகப் பிரசவம் !!

மே 10, 2017. கோவை.

இன்று சித்திரை முழு நிலவு நாள். எங்கள் இல்லத்தில் ஒரு குட்டி சூரியன் உதித்து சரியாக ஒரு வருடம் ஆகின்றது. தாத்தாவின் விருப்பப்படி ஸ்ரீவத்ஸன் என்று பெயர் வைத்திருக்கிறோம். இயற்கை அன்னையின் பெருங்கருணையினால் வீட்டிலேயே இனிமையாக சுக பிரசவத்தில் பிறந்தான்.

தற்காலத்தில் சுகமான இயற்கை வழி பிரசவங்கள் அரிதாகிவிட்டது. அதிலும் முதல் குழந்தை அறுவை சிகிச்சையில் பிறந்திருந்தால் இரண்டாம் குழந்தைக்கு சுக பிரசவம் என்பதை நினைத்துப் பார்ப்பதே தவறு எனும் நவீன கண்ணோட்டம் ஓங்கியிருக்கும் சூழல். ஆம், எங்கள் முதல் மகன் – ஆதி மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தான். தாய் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டான் என்று கூறுவது மிகச்சரியாக இருக்கும்.
இல்லத்திலேயே இரண்டாம் மகன் பிறந்ததின் அனுபவ பகிர்வே இக்கட்டுரை.

சங்கீதாவிற்கும் எனக்கும் 2008 ல் திருமணம் முடிந்து 2010 ஜனவரியில் முதல் மகன் பிறந்தான். கருவுற்றிருப்பது தெரிந்தது முதல் முழுக்க முழுக்க நவீன மருத்துவ கண்காணிப்பில் தான் இருந்தோம். பலவித பரிசோதனைகள், மாத்திரைகள், தடுப்பூசிகள் என்று அவர்கள் கூறியதை அப்படியே பின்பற்றினோம். முதலில் கோவையில் திருமதி. ரஜினி என்று ஒரு பெண்கள் சிறப்பு மருத்துவரிடமும் (Gynaecologist), பின்னர் வளைகாப்பு முடிந்த பிறகு காரைக்குடியில் திருமதி. கவிதா என்ற ஒரு பெண்கள் சிறப்பு மருத்துவரிடமும் ஆலோசனை மேற்கொண்டோம். அவர்கள் கணக்கிட்டு இந்த தேதிக்குள் குழந்தை பிறக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அவர்கள் குறித்த நாள் தாண்டியது. பிரசவ வலி வரவில்லை. வீட்டில் பெரியவர்கள் அவசரம் வேண்டியதில்லை என்று இரண்டு நாள் பொறுத்து மருத்துவமனை அழைத்து சென்றனர். உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று கூறிய பின் மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம்.

(பின்னர் ஆராய்ச்சியில் தெரிந்தது என்னவெனில் ஆங்கில மருத்துவர்கள் கொடுக்கும் தேதி என்பது ஒரு தோராயமான கணக்கு தான். அந்த தேதிக்கு முன் 2 வாரங்களில் இருந்து பின் 2 வாரங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் பிரசவ வலி வரலாம்..அதாவது கிட்டத்தட்ட 28 நாட்கள்)

முதலில் பிரசவ வலியை செயற்கையாக வருவிக்க ஒரு இரசாயனம் கொடுக்கப்பட்டது. காலையிலிருந்து மாலை வரை வலி அதிகமாகாததால், அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை எடுக்க வேண்டும் என்றும், காலம் தாண்டிய பிறகு தாய் வயிற்றில் குழந்தை இருப்பதே ஆபத்து என்றும் கூறினார். நச்சுக்கொடி கழுத்தில் சுற்றிக் கொள்ளலாம் என்றும், கர்ப்பபையில் குழந்தையின் மலமே குழந்தை உடலுக்கு மீண்டும் செல்ல வாய்ப்புள்ளது என்றும் கூறினார். பின்னர் அறுவை சிகிச்சை நடந்தது. (அறுவை சிகிச்சைக்கு மயக்கம் வருவிக்க நிறைமாத கர்ப்பிணியை படுக்க வைத்து பெண்ணின் கால் மூட்டுகள் நெற்றியில் தொடும் வரை வளைத்து அடிமுதுகில் ஊசி போடுவார்கள்). குழந்தையும் மிக நலத்துடன் இறை அருளால் பிறந்தான். ஆனால், அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாய் சங்கீதாவிற்கு தான் உடல்நலம் முன்னைப்போல் இல்லை. பள்ளி, கல்லூரி காலங்களில் விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகள் குவித்தவர் சிறு கனமான பொருளையும் தூக்க இயலாத நிலை அறுவை சிகிச்சையினால் வந்தது.

பின்னர், பிறந்த குழந்தைக்கு, தடுப்பூசிகள், சொட்டு மருந்துகள் என ஆரம்பித்து ஒரு நாள் மூன்று மாத குழந்தையாக இருக்கும் பொழுது சிறு வயிற்றுப்போக்குக்கு, குழந்தை நிபுணர் ஒருவர் Nusobee எனும் தாய்ப்பாலுக்கு மாற்றாக ஒன்றை கொடுக்க, அதிலிருந்து சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் என பல வித உடல் நல தொந்தரவுகள் குழந்தைக்கு வந்தன. இவர்களின் மருத்துவ முறையில் wheeze என கூறப்படும் மூச்சிரைப்பும் வந்தது. குறைந்தது மாதம் ஒரு முறையாவது ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது அவர்களது இரசாயன மருத்துவம். இதில் ஆண்டிபயாடிக் ( Antibiotic) அவசியம் கொடுக்க வேண்டுமா என்று கேட்டால் நம் மீது கோபப்படும் மருத்துவர்களும் உண்டு. குழந்தை வளரும் பொழுது ஒரு 10 லிருந்து 12 வயதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக அதிகமாக சரியாகிவிடும் என்று கூறினார்கள்.

சிறு வயதிலேயே திரு.மூ.ஆ.அப்பன் அவர்களின் ‘இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து’ எனும் புத்தகம் படித்திருந்ததால் இந்த இரசாயன மருத்துவ முறையில் உடன்பாடு இல்லை. இருந்தபொழுதும் அதிலிருந்து மீள வழி தெரியவில்லை. 2013ம் ஆண்டில் இயற்கையின் கருணையினால் இந்த குறை நிவர்த்தி ஆனது.

மேதகு.டாக்டர்.பஸ்லூர் ரஹ்மான் (Dr.Fazlur Rahman MBBS.,MD.,) அவர்கள் ஆங்கில மருத்துவத்தை கைவிட்டுவிட்டு தமிழகத்தில் பாரம்பரிய அக்குபங்சர் (Classical Acupuncture) மருத்துவத்தைக் கொண்டு சிகிச்சை அளித்து வந்தார். அவரிடம் பயின்ற மாணவர்கள் கம்பம் அகுபங்சர் அகடெமி (Cumbum Acupuncture Academy) மூலம் தமிழகம் முழுவதும் ’உடலே மருத்துவர் / வீட்டுக்கு ஒரு மருத்துவர்’ என்ற தலைப்பில் 5 நாள் பயிற்சி அளித்து வந்தனர் (/வருகின்றனர்). அப்படி ஒரு பயிற்சியில் எனது சகோதரர் இராம் சங்கர் கலந்து கொண்டு என்னையும் அடுத்த பயிற்சியில் சேர சொன்னார்.

5000 ரூபாய் கொடுத்து 5 நாள் பயிற்சி எடுத்தேன். பயிற்சிக்குப் பின், மனதில் அப்படி ஒரு மாற்றம். உடலில் உள்ள கழிவுகள் தான் நோய்கள், அவற்றை உடல் வெளியேற்றும் பொழுது ஏற்படும் உபாதைகள் நோய்கள் அல்ல என்றும் , உடலில் கழிவுகள் தங்காமல் இருக்க வாழ்க்கைமுறை மாற்றங்களையும், கழிவுகள் சேர்ந்தால் சிகிச்சை முறைகளையும் மிக அழகாக சொல்லிக்கொடுத்து புரிய வைத்தனர்.

உதாரணமாக, நுரையீரலில் சளி என்னும் கழிவு சேர்ந்தால் அது நோய். அப்பொழுது உடல் பல விதமான தசைகளை ஊக்குவித்து மார்புப் பகுதியில் உள்ள சளியை இருமல் மூலம் (அரை முழம் உயரமான இடத்தில் உள்ள) வாய் வழியாகவோ, மூக்கில் வடியும் திரவ வடிவமாகவோ வெளியே கொண்டு வருகிறது. ஆனால்,நம் அறிவார்ந்த நவீன மருத்துவம் இருமலை நிறுத்தி விட்டு சளியை குணப்படுத்தியதாக நம்மை நம்ப வைக்கிறது. ஆக , ஆங்கில மருத்துவம் நோயின் அறிகுறிகளை மறைத்து விட்டு நோய் குணமாகிவிட்டதாக நம்புகிறது / நம்மையும் நம்ப வைக்கிறது. வெளியேற வேண்டிய சளி உள்ளேயே தங்கி விடுகிறது. தற்போது உடலுக்கு இரண்டு வேலை – உடலில் தங்கிய சளியையும் வெளியேற்ற வேண்டும், மருந்து என்னும் பெயரில் உட்கொண்ட இரசாயன விஷங்களையும் வெளியேற்ற வேண்டும். இதோடு இன்னொரு தலைவலியும் கூட – நம் பழக்க முறைகளில் எம்மாற்றமும் இல்லை. அதாவது எந்த காரணத்தினால் நம் உடலில் கழிவு சேர்ந்தது என்பது நமக்கும் தெரியாது, நம்மை பரிசோதித்து இரசாயனங்களை கொடுக்கும் மருத்துவருக்கும் தெரியாது. ஆதலால் மீண்டும் கழிவுகள் தங்கும், உடல் வேறுவிதமாக கழிவை வெளியேற்ற பார்க்கும், இப்போது இன்னும் அதிக வீரியமுள்ள இரசாயனங்கள் தேவைப்படும். இது தொடர்ந்து நாளடைவில் நுரையீரல் புற்றுநோய் வரை கொண்டு வந்துவிடும்.

இந்த பயிற்சிக்குப் பிறகு எனது மகனுக்கு இரசாயன விஷங்கள் அனைத்தையும் நிறுத்தினோம். உணவு முறையில் தேவையான மாற்றத்தை கொண்டு வந்தோம் – பாக்கெட் பால், ரீஃபைண்டு எண்ணெய்கள், மைதா, வெள்ளை சீனி போன்றவற்றை நிராகரித்துவிட்டு பாரம்பரிய உணவு வகைகளை சேர்க்க ஆரம்பித்தோம். (பின்னர் சொந்தமாக எண்ணெய் தயாரிக்க மர செக்கை நிறுவினோம் என்பது ஒரு தனி கதை.)

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஹீலர். இலியாஸிடம் மகனுக்கு சிகிச்சை மேற்கொண்டோம். மாதம் ஒரு முறை என்ற இளைப்பு 2 மாதங்களுக்கு ஒருமுறை, 3 மாதங்களுக்கு ஒருமுறை , 6 மாதங்களுக்கு ஒரு முறை என குறைந்து வந்து முழுமையாக குணமாகிவிட்டது. உடல் சரியில்லை என்றால் பழங்களும், தேங்காய் பாலும் தான் உணவு. உணவே மருந்து என வாழ்க்கை மாறிவிட்டது. இதன் தொடர்ச்சியாக அக்குபங்சர் மருத்துவத்தை ஆழமாக கற்றுக் கொள்ள எனது மனைவி ஒரு வருட அக்குபங்சர் பட்டய படிப்பை கற்று முடித்தார்.

இயற்கையின் அருளில் மீண்டும் இன்னொரு கரு உருவானது. பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பது தாயின் விருப்பம். இயற்கை என்ன கொடுத்தாலும் சரி என்பது எனது விருப்பம். கருவுற்றது அறிந்ததிலிருந்து அக்குபங்சர் முறையில் முடிந்த வரை வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டோம். எவ்வித மருத்துவ பரிசோதனைகளோ, வேதி இரசாயனங்களோ எடுத்துக் கொள்ளவில்லை. குழந்தை இயற்கையான முறையில் சுக பிரசவத்தில் பிறக்க வேண்டும் என்ற ஆழமான விருப்பம் மட்டும் இருந்தது. அது மிகவும் சுலபமானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையும் சேர்ந்து இருந்தது. திரு. ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்கள் பதிப்பித்திருந்த “இறை வழியில் இனிய சுகப்பிரசவம்” புத்தகத்தை வாசித்திருந்தோம். அதில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், வீட்டிலேயே அடுத்தடுத்த குழந்தைகளை இயற்கையாக பெற்றிருந்த அனுபவங்கள் பகிரப்பட்டிருந்தது. மேலும், அவரது ‘ஹெல்த்டைம்’ இதழிலும், மற்றும் முகநூலில் அக்குபங்சர் குழுக்களிலும் அவ்வப்போது இயற்கை முறையில் பிரசவம் என்ற செய்திகளை அடிக்கடி வாசிக்க நேர்ந்ததால் பிரசவத்தைப் பற்றிய பயம் இறையருளால் துளியும் எங்களுக்கு இல்லை.
இருப்பினும் ஏற்கனவே இயற்கை வழியில் பிரசவம் பார்த்த அக்குபங்சர் மருத்துவர்கள் எவரேனும் உடனிருந்தால் தைரியமாக இருக்கும் என்று தோன்றியதால் அத்தேடலும் உடன் இருந்தது.

ஹதராபாத்தில் இருக்கும் ஹீலர் மீராவை பற்றி கேள்வி பட்டோம். அவருக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சையில் பிறந்தார். பின்னர் ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களின் புத்தகத்தை படித்த பிறகு வீட்டிலேயே தனது இரண்டாம் குழந்தையை பிரசவித்தவர். அவரது நண்பர்களுக்கும் பிரசவம் பார்த்தவர். இந்த அனுபவங்களுக்கு பிறகு தான் அவர் அக்குபங்சர் பயிற்சியையே எடுத்துக்கொண்டார். அவரை தொடர்பு கொண்டு பேசியதில் அவர் மிகுந்த தைரியம் அளித்தார். மிகவும் எளிமையான ஒரு நிகழ்வு என்றும் நம்பிக்கையூட்டினார்.

கோவையில் கண்ணன் – பிரியா தம்பதியினரைப் பற்றி முகநூல் மூலமாக அறிந்தோம். வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பிரசவித்ததை பகிர்ந்திருந்தார்கள். அவர்களை தொடர்பு கொண்டபின், அவர்களது அனுபவமும் நம்பிக்கையை கூட்டியது. அவர்கள் மூலமாக அவர்களுக்கு பிரசவம் பார்த்த ஹீலர் மலர் அவர்களின் தொடர்பும் கிடைக்கப்பெற்றது.

இன்னும் ஒரு தம்பதியினரைப் பற்றி கூற வேண்டும். சொந்தமாக இயற்கை விவசாயம் செய்து கொண்டு, தங்கள் குழந்தைகளுக்கு வீட்டுக்கல்வி முறையில் கல்வி கற்பிக்கும் ஒரு முன்னோடி தம்பதியினர் கோகிலா – விக்னேஷ்வரன். இவர்களை சந்தித்த பொழுது, கோகிலா அவர்கள் யோகா ஆசிரியர் எனவும், சுக பிரசவத்திற்காக சில பயிற்சிகளையும் சங்கீதாவிற்கு கற்றுக் கொடுத்தார். ஹீலர் மீரா மற்றும் பிரியா அவர்களிடம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியது பெரிதும் சங்கீதா தான். தகவலை சேகரித்து கொடுப்பது மட்டும் எனது வேலையாக இருந்தது.

மேலும், திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள் மாதம் ஒருமுறை கோவை வருவார். அவரை நான் நேரில் சந்தித்துள்ளேன். எனது மனைவி சந்தித்ததில்லை. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று பிரியப்பட்டார். அவரது சொற்பொழிவுகள் காலை 6 மணிக்கு நடக்கும், எங்கள் வீட்டிலிருந்து சுமார் 20 கி.மீ தூரம் இருக்கும் ஒரு மண்டபத்தில் சொற்பொழிவு நடக்கும். கட்டணம் எதுவும் கிடையாது. பிரியப்பட்டால் சொற்பொழிவு முடிந்த பிறகு ஏதாவது நன்கொடை கொடுக்கலாம். எங்கள் அன்பு நண்பர் மெய் கண்ட சிவம் , அவரது வாகனத்தில் எங்களை அழைத்து சென்றார். சொற்பொழிவு முடிந்தபின் திரு. ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களை சந்தித்தோம். மனதில் ஆழமான பிரார்த்தனை இருந்தால் போதும் சுகமாக சுலபமாக பிரசவம் நடக்கும் என்று பேரன்புடன் கூறினார்.

நாங்கள் 2015ன் ஆரம்பத்தில் கோவைக்கு மாறி வந்துவிட்டோம். கோவை துடியலூரில் உள்ள ஹீலர் புனிதவதி அவர்களின் தொடர்பை, எனது சகோதரர் மற்றும் ஹீலர் சபரீஸ்வரி மூலம் கிடைக்கப்பெற்றோம். ஹீலர் சபரீஸ்வரி தான் எங்கள் குடும்பத்திற்கு அக்குபங்சர் இயற்கை வழி மருத்துவத்தை அறிமுகப்படுத்தியவர். (இவர் எனது அண்ணியாரின் அண்ணியார்.. 🙂 )

திருமதி. புனிதவதி அவர்களை சந்தித்து ஆலோசனை கேட்டோம். ஒருவர் கருத்தை மிகவும் பொறுமையாக, கவனமாக உள்வாங்கி, அதற்குத் தகுந்தவாறு பகுத்தறிவைக் கொண்டு பதில் அளிக்கும் தோழர் அவர். கருவுற்றிருப்பது ஒரு இயற்கை நிகழ்வு. கருவுற்றிருக்கும் பொழுது இயற்கை வாழ்க்கை முறைகளை பின்பற்றினாலே போதும் எனவும் அதை ஒரு நோய் போல் பாவித்து மாதம் மாதம் சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார். மேலும்,வேறு உடல் உபாதைகள் இருந்தால் அதற்கு மட்டும் சிகிச்சை அளிப்பதாக கூறினார். பொதுவாக வாரத்தில் இரு நாட்கள் அவர் வெளியூருக்கு பயிற்சியளிக்க சென்றுவிடுவார். கோவையில் இருந்தால் அவசியம் பிரசவம் பார்க்க வருகிறேன் என்றும், ஒரு வேளை கோவையில் இல்லை என்றால் நீங்கள் இருவருமே பார்த்துக் கொள்ளுங்கள். அது ஒரு இயற்கையான நிகழ்வு தான். அங்கு தாய்க்கும் குழந்தைக்கும் மட்டுமே வேலை உண்டு, கணவன் மட்டும் உடன் இருந்தால் போதும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இயல்பாக கூறினார்.

இதெல்லாம் ஒரு புறம் நிகழ்ந்தாலும் இரு வீட்டுப் பெரியோர்களிடமும் ஆங்கில மருத்துவர்களை அணுகி ஆலோசித்து வருவதாக அவர்கள் நம்பும் வகையில் கூற நேர்ந்தது. (தீமையிலாத சொலல் வாய்மை என வள்ளுவரே சொல்லிருக்கார் ). ஏனெனில் ஏதாவது ஒரு வகையில் இயற்கை பிரசவத்திற்கு எதிர்ப்பு வந்தால் எப்படி எதிர்கொள்வது என்ற திட்டமிடல் எதுவும் எங்களிடம் இல்லை. ஆதலால் அவர்கள் பயம் கொள்ளாது இருக்க அப்படி கூறியிருந்தோம். அதுவும் அவ்வப்போது மனதில் தோன்றும் சொற்களே. அவையும் இயற்கையாக வந்தவை தான்..திட்டமிட்டு கூறியது எதுவும் இல்லை. பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்துவிடுமாறு, தாய் வீட்டிலிருந்து சங்கீதாவிற்கு தொடர்ச்சியாக அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இங்கு நாங்கள் பார்க்கும் மருத்துவரிடமே பிரசவம் பார்த்துக்கொள்வதாகவும், மருத்துவமனையில் சேரும் பொழுது தகவல் கொடுக்கிறோம், அப்பொழுது தான் அதிக உதவி தேவைப்படும் என்றும் பக்குவமாக எடுத்துக் கூறினார்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. பிரசவ நேரமும் நெருங்கியது. இறையருளால், சுகப் பிரசவம் நடந்து தாயும் சேயும் நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வாகவே எங்களது பிரார்த்தனைகள் இருந்தன.

21 ஏப்ரல் 2016, வியாழக் கிழமை – சித்ரா பௌர்ணமி அன்று காலை முதல் சங்கீதாவிற்கு லேசாக வலி இருந்தது. பிரசவ வலியா எனத் தெரியவில்லை. ஹீலர். புனிதவதி அவர்களை தொடர்பு கொண்டோம். வலியையும்,பசியையும் கவனித்து இருக்க கூறி, வலி அதிகமானால் அழைக்குமாறு கூறினார். அன்று மாலை எனது பெற்றோர் எங்களை சந்திக்க வந்தனர். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சிறப்பு வழிபாடு உண்டு. எங்களை பார்த்து பிரசாதங்களையும் வழங்கி சென்றனர்.

இரவு சுமார் 2.00 மணி அளவில் வலி அதிகமாவதை உணர முடிந்தது. வயிற்றில் குழந்தை அசைவதையும், உருளுவதை சங்கீதாவால் நன்றாக உணர முடிந்தது. காலை ஒரு 6.30 மணியளவில் ஹீலர். புனிதவதி அவர்களை அழைத்து வலி அதிகமாவதை கூறினோம். உடனடியாக வருவதாக கூறினார். வலியுடன் இடம் மாறி அமர்வது, சில வேளை நடப்பது என்று  தன் உடல் வலிக்கு தகுந்தாற்போல் அசைந்து கொண்டிருந்தார். சுமார் 10.00 மணியளவில் பனிக்குடம் உடைந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். இனி குழந்தை விரைவில் வெளியே வந்துவிடும் என்று. ஆனாலும் அடுத்து என்ன நடக்கும், என்ன செய்ய வேண்டும் என்று தெரியாததால் ஒரு சிறு பதட்டம். அதே நேரம் ஹீலர். புனிதவதி அவர்களும் வந்து விட்டார்கள். அவரது வரவு எங்கள் இருவருக்கும் மிகுந்த மனோபலத்தை கொடுத்தது.

ஆதியிடம், அம்மாவிற்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது, அந்த அறைக்கு வரவேண்டாம் என்று கூறினேன். சரி என்று அவனும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு இந்த அறைக்கு வரவில்லை. எனக்குத் தெரிந்த ஏதோ ஒன்றை சமைத்துக் கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு மிகவும் அருமை என்று என்னை பாராட்ட வேறு செய்தான். அப்பொழுது அவனுக்கு 6 வயது தான் முடிந்திருந்தது.
வலி முன்னை விட அதிகமானது. கர்ப்பப்பை நன்றாக சுருங்கும் பொழுது வலி அதிகமாக இருக்கும்.பின்னர் வலி குறைந்துவிடும். பின்னர் சில நேரம் கழித்து மீண்டும் சுருங்கும். இப்படி ஒவ்வொரு சுருக்கத்திற்கும் இடையிலான கால அளவு குறைந்து கொண்டே வந்தது.

வலியின் வீரியத்தை குறைக்க உள்ளங்கால், காது மடல்கள் மற்றும் முதுகுப் பகுதிகளில் அவ்வப்போது அழுத்தம் கொடுத்து வந்தேன். ஒரு கணவனால் இதை மட்டும் தான் செய்ய முடியும் என்பது அப்பொழுது தான் புரிந்தது. ஒரு கருவை சுமந்து, உள்ளிருக்கும் குழந்தைக்காக , தனக்கு பிரியமான உணவுகளையும் தவிர்த்து சில வேளைகளில் கசப்பான, துவர்ப்பான மருந்துகளையும் உட்கொண்டு, (இதைத் தான் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி என்று கூறுகிறார்கள்), பலவிதமான உடல் மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டு ஒரு பெண் தியாக வாழ்வு வாழ்கிறாள். மேலும் பிரசவத்தின் போது மிகுந்த வலியையும் தாங்குகிறாள். அருகில் இருந்து பார்க்கும் பொழுது தான் அதை உணர முடிகிறது. ஆம், தமிழில் ‘பிரசவம் பார்த்தேன்’ என்று தான் கூறுவார்கள். பிரசவம் செய்தேன் என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனெனில், பிரசவத்தை பார்க்க மட்டும் தான் முடியும். அது அந்த தாயும் குழந்தையும் சேர்ந்து முடிவெடுத்து நடத்த வேண்டியது. அதில் மற்றவருக்கு பெரிதாக ஒரு வேலையும் இல்லை. மன தைரியம் அளித்து, அந்த தாய்க்கு சின்ன சின்ன உதவிகள் செய்து, பின்னர் பிரசவம் நடப்பதை பார்ப்பது தான் வேலை!!.

மதியம் சுமார் 2.30 மணியளவில் குழந்தையின் தலை வெளியே தெரிந்தது. பின்னர் மாலை 4.16 மணிக்கு குழந்தை பிறந்தான். ஹீலர். புனிதவதி அவர்கள் அவனை முழுமையாக தாங்கிக் கொண்டார்கள். சங்கீதாவின் முதுகுப்புறமாக அமர்ந்து இருந்தார்கள். ஆண் குழந்தை என்று கூறினார்கள். குழந்தை பிறந்து விட்டான் என்று தெரிந்ததும், சங்கீதா ஆச்சர்யத்துடன் அழவே இல்லை என்று கேட்டார். அடுத்த நொடி ஒரு மெல்லிய இருமல் சத்தம் மட்டும் கொடுத்தார் புதிதாய் பிறந்தவர். பிறந்தவுடன் அழவில்லை. நாம் தான் பல திரைப்படங்களை பார்த்திருக்கிறோமே, அழவில்லை என்பதால் ஒரு சிறு பதட்டம். அழவே இல்லையே என்று கேட்டதற்கு, ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பிறப்பும் ஒவ்வொரு விதமாக தான் இயற்கை அமைக்கும். ஏன் அழ வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும் என்று கேட்டார் ஹீலர். என்னிடம் பதிலில்லை. பிஞ்சுக் கைகளையும் கால்களையும் அசைத்தார்.

அவ்வளவு நேரம் வலியுடன் போராடிக்கொண்டிருந்தவருக்கு திடீரென ஒரு பெரு மகிழ்ச்சி அவரது முகத்தில். ஆம் கிட்டத்தட்ட 14 மணி நேர வலிக்கு பிறகு வலியில்லா மகிழ்ச்சி. ஈன்ற பொழுதில் உள்ள உவகையை அருகில் இருந்து பார்த்து தான் உணர முடிகிறது. குழந்தையை தூக்குவதற்கு ஒரு சிறு பயம். இருப்பினும் சிறிது நேரம் மட்டும் தூக்கிப்பிடித்து மீண்டும் ஹீலரிடமே கொடுத்துவிட்டேன். சங்கீதாவும் வாங்கி அணைத்துக் கொண்டார். குழந்தை உடனடியாக பால் குடிக்கவில்லை. ஒரு விரிப்பை விரித்து அதில் குழந்தையை படுக்க வைத்தார்கள். குழந்தை முழித்துப் பார்த்துக் கொண்டு, கை கால்களை அசைத்த வண்ணம் இருந்தான். ஆதிக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

குழந்தையின் உடலை உடனடியாக துடைக்கவில்லை. தொப்புள் கொடியையும் உடனடியாக அறுக்கவில்லை. இத்தனை நாட்கள் நீரில் இருந்து புதிதாய் காற்று நிறைந்திருக்கும் சூழலுக்கு வந்தபிறகு புதிய சூழலுக்கு ஏற்றவாரு குழந்தையின் உடல் தகவமைத்துக்கொள்ள, தன் உடலில் உள்ள கருவறை ஈரத்திலிருந்தும், நச்சுப்பையிலிருந்தும் தேவையான சக்திகளையும் குழந்தை கிரகித்துக்கொள்ளும். நச்சுப்பை விழுவதற்காக பொறுமையாக காத்திருந்தோம்.

இதனிடையில், முதலில் எனது பெற்றோருக்கு குழந்தை பிறந்த செய்தியை கூறினேன். சங்கீதாவின் பெற்றோருக்கும் செய்தியை கூறினேன். மகிழ்ச்சி, சினம், இரண்டும் ஒரே நேரத்தில் வரும் என்பதை பார்க்க முடிந்தது. நலத்துடன் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி, தகவல் கொடுக்காமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் சினம். அந்த சினம் குறைய நீண்ட நாட்கள் ஆனது. உடனடியாக கிளம்பி வந்தார்கள். மாடி வீட்டில் எங்கள் வீட்டு உரிமையாளர் அக்காவிற்கு கூறியதும் அவருக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பின்னர் சில நேரத்தில் அண்ணன்,அக்கா, நண்பர்கள் வீட்டிலிருந்து அனைவரும் வந்துவிட்டார்கள். அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.

ஒவ்வொரு உடலுக்கு தகுந்தாற்போல் எந்த நேரத்தில் குழந்தையை மற்றும் நச்சுப்பையை வெளியேற்ற வேண்டும் என்பதை அந்த தாயின் உடலே முடிவு செய்கிறது. இரவு ஒரு 8.00 மணி வரையும் நச்சுப்பை வெளியேறவில்லை. தொப்புள்கொடி ஓரளவு நன்றாக சுருங்கியிருந்தது. குழந்தை தொப்புளிலிருந்து சிறிது தூரம் தள்ளி ஒரு பஞ்சு நூலால் தொப்புள்கொடியை இருக்க கட்டிவிட்டு (காற்று புகாமல் இருக்க) ஒரு சிறு பிளேடைக் கொண்டு தொப்புள்கொடியை வெட்டினார்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரில் குழந்தையை குளிப்பாட்டி விட்டார்கள். குளிக்கும் பொழுது தான் முதல் முறையாக குழந்தை அழுதான்.

பின்னர், மீண்டும் நச்சுப்பை வெளியேறுவதற்காக பொறுமையாக காத்திருந்தோம். அன்று இரவு நச்சுப்பை வெளியேறுவதாக இல்லை. ஹீலர் புனிதவதி அவர்களும் அன்றைய நாள் முழுவதும் எங்களுடன் இருந்து ஊக்கமளித்து, வேண்டிய அனைத்தும்செய்து, குழந்தையை குளிப்பாட்டிவிட்டுப்பின் எங்கள் இல்லத்திலிருந்து இரவு 10 மணி அளவுதான் கிளம்பினார்கள். நச்சுப்பை வெளியேறியதும் தகவல் கொடுக்க சொன்னார்கள். மானுடம் செழித்து தழைப்பது இவரைப் போன்றோரால் தான். இவர்களுக்கு எப்படி இந்த நன்றிக்கடனை அடைக்க முடியும்?

குழந்தை நள்ளிரவு வரை தாய்ப்பால் குடிக்காமல் அதற்குப் பிறகு தான் தாய்ப்பால் குடித்தான். மறுநாள் காலை நச்சுப்பை வெளியேறியது. வீட்டிலிருந்து சிறிது தூரம் தள்ளி, பசுஞ்சாணம் கலந்து ஒரு குழி தோண்டி புதைத்து விட்டோம். பின்னர் சமீபத்தில் தான் மரூருட்டி சுகப்பிரசவம் என்று ஒன்று இருப்பது தெரிந்தது. குழந்தையின் தொப்புள்கொடியை அறுக்காமல், நச்சுப்பை விழுந்தவுடன் மஞ்சள் முதலான மூலிகைகளை போட்டு ஒரு துணியை அதன்மேல் சுற்றிவைத்து விடவேண்டும். ஓரிரு வாரங்களில் அதுவாக காய்ந்து உதிர்ந்துவிடும். இவ்வேளையில் உடல் நலத்திற்காகவும், நோய் எதிர்ப்பிற்காகவும் பல விதமான சக்திகளை உடல் கிரகித்துக்கொள்கிறது. இதைத்தான் நவீன விஞ்ஞானம் ஸ்டெம் செல்ஸ் என்று இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது.

அதற்குப்பின்னர் சங்கீதாவின் தாயார் அனைத்து விதமான நாட்டு மருந்துகளும் கொடுத்தார். மேலும், திருமதி. காந்திமதி செந்தமிழன் அவர்களும் பல உணவு முறைகளை கூறினார். இதுவரை குழந்தைக்கு எவ்வித சொட்டு இரசாயனக் கலவைகளோ, தடுப்பூசிகளோ கொடுக்கப்படவில்லை. மிகுந்த உடல்நலத்துடன் இருக்கிறான். இயற்கை வழியில் உடல்நலத்திற்கு என்று செலவு ஒன்றும் இல்லை, நோய்வாய்ப்பட்டு நவீன மருத்துவத்துற்கு செல்லும் போது தான் உடல்நலத்தையும், பொருளையும் சேர்த்து இழக்க நேரிடுகிறது.

சுகப்பிரசவம் நடக்கும் என்று ஆழமான நம்பிக்கை இருந்தது. அதனால் அதற்கான தொடர்புகளும், சூழலும் தானாகவே அமைந்தது. கோவைக்கு மாறியது; ஹீலர் மீரா அவர்களின் தொடர்பு கிடைத்தது; இங்கு ஹீலர் புனிதவதி அவர்களை சந்தித்தது – அவர்கள் பொதுவாக சனி, ஞாயிறுகளில் வெளியூர் சென்று விடுவார்கள். அதற்கேற்றாற்போல், வியாழன் இரவு பிரசவவலி எடுக்க ஆரம்பித்து, குழந்தை வெள்ளிக் கிழமை பிறந்தது; ஃபஸ்லூர் ரஹ்மான் அவர்களை சந்தித்தது. கோகிலா அவர்களிடம் சில உடற்பயிற்சிகள் கற்றுக்கொண்டது என்று அனைத்தும் – எல்லாம் வல்ல இறைவன் பேரன்புடன் வழிநடத்தியதாகவே உணர்கிறோம்.

வாழ்வதற்கு ஒரு அற்புதமான இல்லத்தை அளித்த உரிமையாளர், ஹீலர் புனிதவதி அவர்கள், ஹீலர் மீரா அவர்கள், கண்ணன் – பிரியா தம்பதியினர், ஹீலர் மலர் அவர்கள், கோகிலா அவர்கள், காந்திமதி செந்தமிழன் அவர்கள் மற்றும் எப்பொழுதும் நலம் விரும்பிகளாக இருக்கும் அன்பு உறவுகள் மற்றும் நட்புக்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவிக்கிறோம். எப்பொழுதும் மனிதத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் இயற்கைக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

முதல் பிரசவம் அறுவை சிகிச்சையில் நடந்த பிறகும் , இரண்டாம் குழந்தை இயற்கையாக பிறக்க முடியும் என்று பல பல சான்றுகள் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால், ஒரு சில வாழ்க்கை முறைகளை மாற்றுவதால் அனைத்து பெண்களுக்கும் சுகப்பிரசவம் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நவீன மருத்துவத்தின் அறியாமையினாலும், இரசாயன வியாபார நிறுவனங்களாலும், எத்தனையோ பெண்களும், குழந்தைகளும் தங்கள் உடல்நலத்தை இழக்கின்றனர். இக்கட்டுரையால் ஒருவராவது நவீன மருத்துவ வியாபாரிகளின் பிடியில் இருந்து தப்பிப்பாரென்றால் இக்கட்டுரை அதன் பயனை அடையும்.

மிகுந்த நன்றியுணர்வுடன்,
சோ.சங்கீதா & நா.முத்து சரவணன்.